கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வரும் பழனிச்சாமி கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தினசரி அதிகாலையில் எழுந்து தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்குந்தபுரம் பிரதான சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது பால் பண்ணைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில், அவர் வழக்கமாக செல்லும் செங்குந்தபுரம் பிரதான சாலையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி அதிகாலை சுமார் 4.45மணியளவில் வெள்ளை நிற காரில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து காருக்குள் தள்ளி கடத்த முயற்சி செய்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி தன்னை கடத்த முயற்சிப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு அந்த மர்ம நபரின் பிடியில் இருந்து கத்தி, கூச்சலிட்டு ஓடத் தொடங்கியதும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை அங்கேயே விட்டு விட்டு காரில் தப்பிச் சென்று விட்டனர். தற்போது அந்த சிசிடி காட்சி வெளியே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.