அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மாதந்தோறும் இப்படி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், 12 மாதங்களுக்கும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்பது ஐதீகம்.
எனவே மற்ற மாதங்களில் தர்ப்பணம் கொடுப்பதை விட ஆடி அமாவாசையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி இன்று திருச்சி திருவரங்கம் அம்மாமண்டப படித்துறை மற்றும், முக்கொம்பு, கல்லணை, கும்பகோணம் மகாமக குளம் , தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்காக அதிகாலை 5 மணிக்கே மக்கள் படித்துறைகளுக்கு வந்தனர். காவிரியில் நீராடி அங்கிருந்த புரோகிதர்களிடம் அரிசி, காய்கறி, அகத்திகீரை, வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன் தட்சணையும் கொடுத்து மந்திரங்கள் ஓதி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.
காசியை விட வீசம் அதிகம் எனக் கூறப்படும் புண்ணிய தலமான திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் அதிகாலை 5 மணிக்கே மக்கள் திரண்டு தர்ப்பண சடங்குகளை செய்தனர். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
இதன் காரணமாக அம்மா மண்டப சாலை மற்றும் திருவையாறு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல ராமேஸ்வரம், வேதாரண்யம் கடலிலும் இன்று பல்லாயிரகணக்கான மக்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.