கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு வழித்தட

ங்களில் பேருந்துகள் சென்று வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கமாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
சமீபகாலமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக (Rapido) பைக் புக் செய்து பயணம் செல்வதால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக ராபிடோ சேவையில் வந்த 5 வாகன ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சிறைபிடிக்கப்பட்ட ராபிடோ ஓட்டுநர்களை விடுவித்து அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் ராபிடோ நிறுவனத்தினர் மிகவும் குறைந்த வாடகைக்கு இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதால், தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
ஆட்டோக்களுக்கு ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்துவதால் தாங்கள் மிகுந்த நஷ்டம் அடைந்து வருவதாகவும், தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

