கோவை, வால்பாறையில் 103 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வால்பாறை சமுதாய கூடத்தில் தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் அழகு சுந்தரவள்ளி முன்னிலை வகித்தார்.
இதில் 103 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது. வளைவுக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களில் 40க்கும் மேற்பட்டோர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டியதன் அவசியம் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலம் வரை உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே உண்ண வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு சென்று உடல் நிலையை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி உணவிலும், மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்து, ஆரோக்கியமான குழந்தை பிறக்க முதல்வரின் சிறப்பு கவனத்தின் பேரில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், ஊட்டச்சத்து பணியாளர்களும் அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளனர். இதனை கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) வீணா, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பாபு லட்சுமணன், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

