Skip to content

புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாம் காலனி நான்கு சாலை சந்திப்பில், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் வழக்கமாகச் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் கட்டுக்கட்டாகக் காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. அந்த வழியாகச் செல்லும் மாடுகள், நாய்கள் மற்றும் குரங்குகள் இந்தக் கழிவுகளுக்கு இடையே சுற்றித் திரிகின்றன.

சிதறிக் கிடந்த சில மருந்து பாட்டில்களை அங்கிருந்த குரங்குகள் எடுத்துச் சென்றது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விலங்குகள் இந்த மருந்தைக் குடித்தாலோ, அல்லது அந்தப் பகுதியில் விளையாடும் சிறுவர்கள் தெரியாமல் இதனை அருந்தினாலோ உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் அடிக்கடி ஊசி சிரிஞ்சுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைக் குழாய்கள் (Test Tubes) கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது. முன்னதாகப் புகார் அளித்தபோது நகராட்சி அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தினர். இருப்பினும், தற்போது மீண்டும் அதிக அளவில் மருந்து பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு இந்த மருந்து பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவக் கழிவுகளைச் சட்டவிரோதமாகச் சாலை ஓரத்தில் வீசிச் சென்றவர்கள் குறித்துச் சுகாதாரத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!