ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு பீமாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டை உற்சாகம் களைகட்டியுள்ளதால், ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பீமாவரம், ஏலூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளனர். சாதாரண நாட்களில் ரூ.5,000 வரை இருக்கும் அறை வாடகை, தற்போது 3 நாள் தொகுப்பாக (Package) ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை வசூலிக்கப்படுகிறது. சில முக்கிய ஓட்டல்களில் ஒரு அறைக்கு ரூ.1 லட்சம் வரை வாடகை கேட்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கோதாவரி மாவட்டங்களில் பல கோடி ரூபாய் பந்தயத்துடன் சேவல் சண்டைக்குத் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகத் தடேபள்ளிகுடேமில் ரூ.2.5 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பந்தயம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் போட்டியாளர்கள் பந்தயச் சேவல்களைப் பிரத்யேகமாகத் தயார்படுத்தி வைத்துள்ளனர்.

