கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான் சவுதா பகுதிக்கு வந்து பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று விஷ பாட்டிலை பறித்து அவரை மீட்டனர். பின்னர் அவர் அவசர சிகிச்சைக்காக பவ்ரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
விசாரணையில், வலதுசாரி செயற்பாட்டாளர் புனீத் கெரேஹள்ளியுடன் இணைந்து அனேகல் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக மருத்துவர் நாகேந்திரப்பா மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தன்னைத் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட கடுமையான மனஅழுத்தம் காரணமாகவே தான் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மிக உயரிய பாதுகாப்பு கொண்ட சட்டசபை கட்டிடத்தின் முன்பே மருத்துவர் ஒருவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விதான் சவுதா போலீசார் மருத்துவர் நாகேந்திரப்பா மீது வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

