பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் உள்கட்சி மோதல் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், டெல்லி காவல்துறை என மூன்று முனைகளில் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவி, சின்னம், பெயர் ஆகியவற்றை அன்புமணி தரப்பு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முன்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது டெல்லி காவல்துறையில் அன்புமணி மீது கிரிமினல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் கையெழுத்திட்ட புகார் மனுவில், “அன்புமணி 28.05.2022 அன்று பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 28.05.2025-ல் முடிவடைந்துவிட்டது. ஆனால் 2023-ல் நடைபெறாத பொதுக்குழுவை நடத்தியதாகவும், தானே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் போலி ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்பேரில் தேர்தல் ஆணையம் அன்புமணியை 2023 முதல் 2026 வரை தலைவராக அங்கீகரித்ததை ராமதாஸ் தரப்பு “தேர்தல் ஆணையத்தின் மோசடி” என்று கடுமையாகச் சாடியுள்ளது.
இந்தப் புகாரை டெல்லியில் நேரில் அளித்த பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணி, டெல்லி காவல்துறையிடம் அன்புமணி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக் கோரியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி கொதிப்புடன் தெரிவித்தார்: “பாமகவுக்கும் மருத்துவர் ராமதாஸ் அய்யாவுக்கும் தேர்தல் ஆணையமே துரோகம் இழைத்துள்ளது. இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இப்படி நடக்கக் கூடாது. தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம்; அதுவே போலி ஆவணத்தை ஏற்று மோசடி செய்தால் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எப்படி நம்பிக்கை வரும்?” என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த ஐந்து மாதங்களாக உண்மையான ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. பாமகவின் உட்கட்சி மோதல் தற்போது கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்கு என பல முனைகளில் சென்றுள்ளதால், கட்சியின் சின்னம், பெயர், தலைமை உள்ளிட்டவை யாருக்கு என்பது விரைவில் தீர்மானமாக வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் பாமகவின் எதிர்காலக் கூட்டணி, தேர்தல் பங்கேற்பு ஆகியவற்றையும் பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

