திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை

கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே போகி பண்டிகையின் அடையாளமாக விளங்குகிறது.
போகி பண்டிகையான இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்து, தேவையற்ற பழைய பொருட்களை அகற்றி, பூஜை அறைகள் மற்றும் சமையல் பொருட்களை சுத்தப்படுத்தி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பழைய துணிகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
மேலும் பள்ளிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களும் பெற்றோர்களுடன் இணைந்து போகி பண்டிகையில் உற்சாகமாக பங்கேற்று, பழைய துணிகளை எரித்து கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
தை பொங்கலை வரவேற்கும் இந்த பாரம்பரிய பண்டிகை, மக்கள் மத்தியில் புத்துணர்ச்சி மற்றும் புதிய தொடக்கத்தின் நம்பிக்கையை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

