Skip to content

ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

  • by Authour

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். விமானம் வானில் பறக்க தொடங்கியபோது முன்பகுதியில் ஒரு பறவை திடீரென மோதி, இன்ஜின் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து விவரத்தை கூறினார்.
இதையடுத்து உடனடியாக விமானம், சென்னையில் தரை இறக்கப்பட்டு ஒதுக்கு புறமான இடத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, உடனடியாக விமானத்தை சீரமைக்க தாமதமாகும் என தெரியவந்ததால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் பொறியாளர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 4.30 மணியளவில் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தும்படி டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!