Skip to content

முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலையில், மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நேற்று நடந்தது. கரூர் மாவட்ட திமுக  செயலாளரும் , மின்சாரத்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி தலைமை தாங்கி  சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  , கோமாளியா, இல்லையா(பலத்த கைதட்டல்). அவர் காலையில் ஒன்று பேசுவார். மாலையில் ஒன்று பேசுவார்.  மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது இந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும், அவர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்று,  தான் பேசிய பேச்சினை கூட அடுத்த நாள் மறந்து பேசக் கூடியவர்.  லண்டனில்  என்ன மொழியில் பேசினார் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு சொல்லிவிட்டு  பின்னர்  நீங்கள் மும்மொழி கொள்கை பற்றி பேசுங்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.   விடியல்

பயணம் மூலம் கோடிக்கணக்கான  பெண்கள்    கட்டணமின்றி  பஸ்களில் பயணிக்கிறார்கள். புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன்,  தமிழ்ப்புதல்வன், மக்களைத்தேடி மருத்துவம்  என ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளார்  நம் முதல்வர்.

முதல்வரின் கனவு  திட்டமான  பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத நிலையில் முதல்வர் தளபதி அதனை அமல்படுத்தினார். இந்தியாவுக்கே வழிகாட்டியாக அதனை கொண்டு வந்தார். இன்று இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்ல,  பல்வேறு வெளிநாடுகளும் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.

நம் முதல்வர் அறிவித்த பிறகு உலகமே அதனை பின்பற்றுகிறது.  திமுகவின் எல்லா  திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி தருவதில்லை. கல்விக்கு கூட நிதி தருவதில்லை. ஆனாலும் நம் முதல்வர் திட்டங்களை செயல்படுத்துகிறார்.  திமுகவின்  அனைத்து  கொள்கைகளையும் விமர்சிக்கும் பாஜக,   நமது திட்டங்களை மட்டும் காப்பி அடித்து கொள்கிறது.  பேசுவது ஒன்று,  செயல்படுத்துவது ஒன்று என்று மாறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் பிஜேபி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை  பாஜக காப்பி அடித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் வாக்குகளை பெற்றது.

இவ்வாறு  அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து திமுக தலைமை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா , எம்எல்ஏக்கள்  மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, திமுக மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, கரூர் மாநகர மேயர் கவிதா சரவணன், குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!