கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல் வீடியோவை வெளியிட்டதோடு, அந்த வீடியோவில் தவெகவினரை திமுகவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் விஜய் பேசியது விமர்சனத்தை பெற்று வருகிறது.
தனிடையே தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜகவினர் பேசி வரும் நிலையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் ஆதரவை பெற ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூர் விவகாரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சித்து வருகிறது. விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை சொன்ன பின் வீடியோ வெளியிடுகிறார். விஜய்யின் சாயம் வெளுத்துவிட்டது..
அதேபோல் 2014ல் அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததை போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மை வாக்குகளை விஜய் மூலமாக பாஜக பிரிக்க முயற்சிக்கிறது. விஜய் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? தமிழக காவல்துறையினர் இந்த ஓரவஞ்சனையான நடவடிக்கை நல்லதல்ல.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய அஞ்சுகிறதா? விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையில் மறைமுக டீலிங் இருக்கிறதா? விஜய்க்கு ஒரு நீதி.. புஸ்ஸி ஆனந்த்-க்கு ஒரு நீதியா? விஜய் போன்ற ஆபத்தான சக்திகளிடம் தமிழ்நாடு சிக்கினால், கலவர பூமியாகிவிடும். கழுத்தை நெறித்து கொலை செய்ததற்கும், ஸ்பிரே அடித்ததற்கும் ஆதாரம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.