Skip to content

பிரதமருக்கு கருப்புக்கொடி- வீட்டு காவலில் வி.ச.மா.தலைவர் பழனியப்பன்

கோவையில் நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பன் நேற்று இரவு முதல் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று கோவைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று கூறும் பிரதமர் மோடி திருத்தப்பட்ட மரபணு விதையை விவசாயத்தில் புகுத்தி உள்ளார். இது முற்றிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சீர்கேடாகும். நெல் கொள்முதலில் ஆண்டுதோறும் 22 சதவீத ஈரப்பதத்தை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆனால் மத்திய குழு வருவதும், போவதும் மட்டுமே நடக்கிறது. ஆனால் 22 சதவீத ஈரப்பத கொள்முதல் நடப்பதே இல்லை. மேகதாட்டில் கர்நாடகா அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீடு உள்ளது. இதை கண்டித்து கோவையில் நடக்கும் வேளாண் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பனை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு தமிழ்ப்பல்கலைக்கழக இன்ஸ்பெக்டர் (பொ) முத்துக்குமார் தலைமையிலான போலீசார் 7 பேர் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர்.

error: Content is protected !!