Skip to content

அமெரிக்காவில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர துரை வைகோ எம்பி உதவி

திருச்சி எம்பி துரை வைகோ கூறியதாவது..

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலு ராமு என்பவர் அமெரிக்காவில் பணியாற்றிய இடத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு, எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 16.02.2026 ஆம் தேதி மறைந்த பாலு ராமு அவர்களின் மனைவி மகேஸ்வரி, 3 மகள்கள் கோமதி, ரேவதி, சுமதி மற்றும் அவரது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எனது அலுவலகத்தில் இருந்து, மின்னஞ்சல் மூலமாக ஒன்றிய வெளிவிவகாரத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், 17.02.2026 அன்று திருச்சி வந்த நான் வெளி விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசினேன்.

இதனையடுத்து, பாலு ராமு அவர்களது உடல் இந்தியா வருவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்ட தகவலை வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் 21.02.2026 அன்று எனக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தனர். நானும், அவர்களது குடும்பத்தினரிடம் இதை உறுதிபடுத்தினேன்.

அதன்படி மறைந்த பாலு ராமு அவர்களின் உடல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 25.02.2026 இன்று வந்தது. விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி, உடலை ஒப்படைக்கும் நடைமுறைகளை விரைந்து முடிப்பதற்கும் ஏற்பாடு செய்தேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் மறைந்த பாலு ராமு அவர்களது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதன்பின்னர் மறைந்த பாலு ராமு அவர்களது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோரிடம் உடல் ஒப்படைப்பதற்கும் உதவினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வாயிலாக இலவச ஆம்புலன்ஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்தேன்.

அந்த ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து திருச்சி திருவெறும்பூருக்கு வந்த பாலு ராமு உடலுக்கு மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், இறுதி நிகழ்விலும் பங்கேற்று மறுமலர்ச்சி திமுக சார்பிலும், எனது சார்பிலும் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்ற பதினாறு மாதங்களில், அயலகத்தில் உயிரிழந்த பத்துக்கும் மேற்பட்டோர் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வந்து, உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். வேலைக்காக வெளிநாடு செல்லும் பலர் இறந்து போனபின்பு, சரியான வழிகாட்டுதலும், உடலைக் கொண்டு வருவதற்கு போதிய வசதியின்மையாலும் இறந்து போனவர்களின் முகத்தை உறவினர்கள் பார்க்க முடியாமல், அயலகத்திலேயே இறுதி நிகழ்ச்சி நடக்கின்ற சூழல் உள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் பார்ப்பதற்கு, என்னால் உதவ முடிகிறதே என்ற திருப்தி ஏற்படுகிறது.

இதுபோல அயலகங்களில் வேலைக்காகச் சென்று, தவறானவர்களிடம் சிக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களை உயிருடனும் மீட்டு வந்திருக்கிறேன் எனும்போது, பொதுவாழ்க்கை எனக்கு வழங்கி இருக்கின்ற இந்தப் பொறுப்பை உணர்ந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவில் இறந்து போன பாலு ராமு அவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கேற்கின்றேன். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!