தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 2-ந்தேதி தனது நண்பருடன் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் படித்துறையில் நின்று கால் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முகமது இப்ராகிம் தவறி ஆற்றில் விழுந்தார். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கினார். உடன் வந்த நண்பர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்து தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து முகம்மது இப்ராஹிமை தேடினர் .
இந்த நிலையில் நேற்று மாலை தஞ்சை அடுத்த துறையூர் பகுதியில் ஆற்றின் கரையில் முகமது இப்ராகிம் உடல் ஒதுங்கியது. தகவல் அறிந்து தாலுகா போலீசார் விரைந்து சென்று முகமது இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
