கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அலுவலக இ-மெயில் முகவரிக்கு வந்த மிரட்டல் தகவல் உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், வெடிகுண்டு கண்டறியும்
நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் அலுவலக வளாகத்தை முழுமையாக சோதனை செய்தனர். நுழைவாயில்கள், வாகன நிறுத்துமிடம், புதிய கட்டிடம், பழைய கட்டிடம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சோதிக்கப்பட்டன. நீண்ட நேர சோதனையின் பின், இது வெறும் புரளி மிரட்டலாகவே தெரியவந்தது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.