டில்லியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து, போலீசார் சோதனை நடத்திய போது வெடிகுண்டுகள் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை, வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இன்றும் (செப்.20) பிரபல பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பிரபல பள்ளிகளும் வெடிகுண்டு மிரட்டலில் இருந்து தப்பவில்லை.
ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் பெரும் குழப்பமும், பீதியும் எழுந்தது. அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் குழுக்களாக பிரிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்டவில்லை. இது வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்த விசாரணையை தொடங்கி உள்ளனர்