கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து பெரிய போர்வல்கள் மூலம் குமாரமங்கலத்தில் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் சிவகங்கை மாவட்டம் தேனாம்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் குமாரமங்கலம் அருகே கூட்டுக் குடிநீர் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி
நேரமாக சுமார் 10 அடி தூரத்திற்கு பீச்சி அடித்த குடிநீர் அருகில் இருந்த அண்ணாதுரை என்பவரின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் சுமார் நான்கரை ஏக்கர் வாழைத்தோட்டம் நீரில் மூழ்கியது . இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மேலும் இதனால் குமாரமங்கலம் சாலையில் சாலை உடைப்பும் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சாலையில் ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாய அண்ணாதுரை வாழைத் தோட்டத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 2 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது கூட்டு குடிநீர் விளைநிலத்தில் புகுந்ததால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.