தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் தனியார் மேன்ஷன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் அறைக்குத் திரும்புவது வழக்கம்.
நேற்று காலையில் வழக்கம்போல் அங்கிருந்தவர்கள் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அடுத்தடுத்து 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இவ்வாறு 5 அறைகளிலும் இருந்த பணம், லேப்டாப், பவர் பேங்க் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மேன்ஷனில் நடந்த இந்தத் துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

