Skip to content

தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது;-.
தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.
தேவைக்கு ஏற்ப நெல் சேமிப்பு திறந்தவெளி கிடங்குகளை உடனே திறக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையை மாற்றி தினசரி ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும்.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள், தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மற்றும் தமிழக அரசு இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர். மேலும், விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை கேட்டு, வரும் நவ.
7ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!