தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்படடார். அவர்களது கார் திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியிருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போன அப்துல் காதர், காரின் பிரேக்கை வேகமாக அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கார் தாறுமாறாக திரும்பி சாலையின் ஓரம் நின்றது. இதையடுத்த கணவன், மனைவி இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் இருவரும் உடனடியாக காரில் இருந்து வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் காரில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் ஒருவழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாலையின் நடுவே கார் தீ பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு
- by Authour
