தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற அப்பா மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தில் மனைவி மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தனர்.
தஞ்சாவூர் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த பக்கரி என்பவரின் மகன் அறிவழகன் (37). இவரது மனைவி உஷா (35). இவர்களின் மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9). இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அறிவழகன் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு தனது மனைவி, மகள்கள் மற்றும் தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகியோருடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் ஒன்று அறிவழகன் பைக் மீது வேகமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விபத்தில் அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. உடன் அக்கம்பக்கத்தினர் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.