திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 7:30 மணியளவில் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தினேஷின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. வேகம் குறையாத கார், சாலையோர வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புக் கம்பிகளைப் பயங்கரமான வேகத்தில் உடைத்துக்கொண்டு பாய்ந்தது.
தொடர்ந்து அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது பலமாக மோதிய கார், வாய்க்காலுக்குள் விழாமல் மரக்கிளையில் மோதி அப்படியே அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தினேஷுக்குக் கால் முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் நல்ல வாய்ப்பாக லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் உடனடியாக முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார், விபத்துக்குள்ளான காரை மீட்க நடவடிக்கை எடுத்ததோடு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தரத்தில் தொங்கிய காரைப் பார்க்க அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

