தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், விஜயின் பிரசார வாகனம் நடந்து செல்லும் வேகத்தில் கூட போக முடியாத நிலை இருந்தது.இதனால், பல மணி நேரம் தாமதமாக ஒவ்வொரு இடத்திலும் பிரசாரம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆனதால் பெரம்பலூர் சென்றடைய முடியாத நிலையில், விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார். முன்னதாக விஜய் பிரசாரத்துக்காக திருச்சிக்கு வந்து இறங்கியதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் காலை 10.30 மணிக்கு மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் மதியம் 2.50 மணிக்குத்தான் அவர் பிரசார இடத்துக்கு வர முடிந்தது. மக்கள் கூட்டத்தில் அவரது வாகனம் நகர்ந்தே வரும் நிலை ஏற்பட்டது. 7 கி.மீ தூரத்தை கடந்துவர 5 மணி நேரம் ஆனது. விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் தவெகவினர் அணிவகுத்தனர். விஜயை பார்க்கும் ஆசையில், மரங்களிலும் மின் கம்பங்களிலும் கூட சிலர் ஏறியதை காண முடிந்தது. இந்த நிலையில், விஜய் பிரசாரத்தின் போது விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக திருச்சி மாவட்ட செயலாளர் கரிகாலன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது கண்ட்டோன்மென்ட் காந்தி மார்க்கெட் ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வௌிவரமுடியாத பிரிவுகளில் தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.