சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:
மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக ஒன்றிய பாஜக அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
முறையாகத் திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள்நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூகநீதியை அடையவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்றியமையாததாகும். அநீதிக்குத் தீர்வு காணவேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டும். இன்றைய அறிவிப்பு தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் போராடிப் பெற்ற வெற்றி ஆகும். முதன் முதலாக நாம் தான் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பொறுப்பு ஒன்றிய அரசு தான் இதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள முடியும், அதுதான் சென்சஸ் சட்டப்படி சட்டரீதியாகவும் செல்லும் என்றோம். நமது நிலைப்பாடு சரி என இன்று நிறுவப்பட்டுள்ளது. திராவிட மாடலின் வழியே சமூகநீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.