பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதலால் அடுத்தடுத்து பல அதிரடியான உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அன்புமணியை செயல்தலைவராக நியமித்த ராமதாஸ், இனி இறுதிமூச்சு உள்ளவரை கட்சியின் நிறுவனரும் நானே, தலைவரும் நானே என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் மறைமுகமாக பாமக ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது.
இதுஒருபுறம் இருக்க தனது அறையில் தான் அமரும் இடத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இங்கிலாந்தில் இருந்தோ அல்லது பெங்களூருவில் இருந்தோ வரவழைக்கப்பட்ட அதிநவீன ஒட்டுக்கேட்புக் கருவி தனது இருக்கையில் இருந்ததாக கூறியிருந்த ராமதாஸ், அதுகுறித்து கிரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் போலீஸார் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் இருந்து ஒட்டுகேட்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டு டிஎஸ்பி உமாதேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், 3 ஆண்டுகளாக தனது தொலைபேசி உரையாடலும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், தனது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவலை தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஹேக் செய்யப்பட்ட வைஃபை மோடம் உள்ளிட்டவற்றை ராமதாஸின் நேர்முக உதவியாளர் சாமிநாதன் , கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் ஒப்படைத்தார். மேலும், புகாரில் ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கின்றனர், யாரிடமெல்லாம் அவர் என்ன பேசுகிறார் என்பதை சிசிடிவை ஹேக் செய்து கண்காணித்து வந்ததாகவும், நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.