Skip to content

ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி இரவு ஒரு பிறந்தநாள் விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை வீட்டில் விடுவதாகக் கூறி நிறுவனத்தின் CEO ஜிதேஷ் பிரகாஷ் சிசோடியா, சக பெண் ஊழியர் மற்றும் அவரது கணவர் கௌரவ் சிரோஹி ஆகியோர் காரில் ஏற்றியுள்ளனர்.

திட்டமிட்ட சதி? பயணத்தின் போது, காரை ஒரு இடத்தில் நிறுத்திய கும்பல், அந்தப் பெண்ணுக்குச் சிகரெட் போன்ற ஒரு பொருளை வலுக்கட்டாயமாக வழங்கியுள்ளது. அதனை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் காலை சுயநினைவு திரும்பியபோது, தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்து அந்தப் பெண் கதறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகளை முடித்து, குற்றம் சாட்டப்பட்ட CEO ஜிதேஷ் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இது போதையில் நடந்த தற்செயலான நிகழ்வா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குற்றமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!