Skip to content

விரைவில் ஆட்சி மாற்றம்.. நடிகை கௌதமி பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் மீனவப் பெண்களுடன் இணைந்து, விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி விழாவைக் கொண்டாடினர்.

விழாவில் பேசிய நடிகை மதுவந்தி, மீனவர்களின் பெருமையை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். “மகாபாரதத்தை எழுதிய வியாச பெருமானே மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். மீனவர்களை மதிக்காத யாரும் உருப்பட முடியாது. தமிழ்நாடு இன்னும் மூன்று மாதங்களுக்குத்தான் இப்படி இருக்கும், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் தமிழகம் உருப்படும்; அப்போது நிச்சயம் நல்லது நடக்கும்,” எனத் தெரிவித்தார். மேலும், சர்வதேச எல்லையில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தவர்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி மட்டுமே மீனவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை கௌதமி, மீனவ கிராமங்களின் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும், அதனை அரசு போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள் கடலோர கிராமங்களையும் சென்றடைய வேண்டும். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான வளர்ச்சி கிடைக்கும்,” என்று பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கௌதமியிடம், “தமிழகம் வளர்ச்சியில் நாட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எதன் அடிப்படையில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்தப் புள்ளிவிவரங்களின் உண்மைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் எந்தக் கணக்கின் அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறீர்கள்? தரவுகள் மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசப் பல விஷயங்கள் உள்ளன. ஆனால், மக்கள் மத்தியில் சென்று பார்த்தால் மட்டுமே அவர்களின் உண்மையான துயரம் புரியும். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. வேலைக்கும் வருமானத்திற்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில், நடுத்தர வர்க்கத்தினரோ ஏழைகளோ மகிழ்ச்சியாக இல்லை,” எனத் தமிழக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

error: Content is protected !!