Skip to content

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த சக மாணவி உட்பட 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூனு(21). இவர் தங்கும் விடுதியில் தங்கி சென்னை பெருங்குடியில் உள்ள சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு தன்னுடன் படிக்கும் சக மாணவியான ஊட்டியை சேர்ந்த பிரியா(21) மற்றும் உடன் படிக்கும் சக மாணவர்களான கரூர் பகுதியை சேர்ந்த அப்ரருல் ஆர்த்திப்(21) மற்றும் கோவை காளப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீப்(22) ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். பிறகு இரவு விருந்து முடிந்ததும், 2 மாணவிகள் உட்பட 4 பேரும் ஒரே காரில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் இருந்து தரமணி நோக்கி அசுர வேகத்தில் வந்தனர்.

காரை சட்டக்கல்லூரி மாணவன் அப்ரருல் ஆர்த்திப் ஓட்டி வந்தார். கார் காந்தி மண்டபம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அவுட் கேட் அருகே வரும் போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென வலது புறம் திரும்பியது. அப்போது மாணவர்கள் வந்த கார் வேகத்தின் காரணமாக திடீரென பிரேக் பிடிக்க முடியாததால் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த மாணவன் அப்ரரூல் ஆர்த்திப் மற்றும் ஊட்டியை சேர்ந்த பிரியா, கோவையை சேர்ந்த ஜெகதீப் ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பினர்.

மேலும் முன்னால் சென்ற காரின் ஓட்டுநரான கடலூர் மாவட்டம் பண்ருட்டி கந்தன் பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன்(33) வலது கால் முட்டி உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஜெகேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரியா உட்பட 3 சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் விபத்துக்குள்ளான கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!