Skip to content

தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,
சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 202324 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில், 56 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகத் துறையால் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இம்மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தில், பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பு, சங்ககாலச் சோழர்கள், சமயங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, நிருவாகமும் ஆட்சிமுறையும், கட்டடக்கலைச் சிறப்பு, நகரமைப்பு, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு (சோழர் கால செப்புப் படிமங்கள் மற்றும் கற்சிற்பங்கள்), சமூக வாழ்வு, பொருளாதாரம், இலக்கியம், கடல்கடந்த வாணிபம், வெளிநாட்டுப் படையெடுப்புகள், கடற்படை வலிமை மற்றும் இராணுவத் திறன் ஆகிய தலைப்புகளில் தனித்தனி காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாபெரும் சோழர் அருங்காட்சியகம், சோழர் கால பண்பாட்டு முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பண்பாட்டு மையமாகவும், கல்வி, ஆய்வு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முன்னோடி மையமாகவும் அமைக்கப்படவுள்ளது.

error: Content is protected !!