சென்னை, நாகாலாந்து ஆளுநரும், மூத்த பாஜக தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். தற்பொழுது, சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் இல்லத்தில் அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின் அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்தார். அவரை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், இல.கணேசனின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, அவரது அரசியல் மற்றும் பொதுச் சேவைகளை நினைவு கூர்ந்தார். குறிப்பாக, இல.கணேசன் பாஜக மாநிலத் தலைவராகவும், தேசிய பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியதையும், அவர் மறைந்த முதல்வர் கருணாநிதி மீது மதிப்பு வைத்திருந்ததையும், தனிப்பட்ட முறையில் தனக்கு அன்பு காட்டியதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.