தமிழக முதல்வர் ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்குப்பின் நாளை (17ம்தேதி) திருச்சி கலெக்டர் அலுவலகம் வருவதால் வளாகத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மத்திய பஸ் நிலையத்தில் பெரியார் சிலை வளாகமும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கரூரில் நாளை (17ம்தேதி) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானத்தில் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் மு.க .ஸ்டாலினுக்கு திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.அங்கிருந்து கரூர் செல்லும் முன்பாக, விமான நிலையத்திலிருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்,தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கிறார். இதில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் அவர் கரூர் புறப்பட்டுச் செல்கிறார்.முன்னதாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பெரியார் சிலைக்கு மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.இதற்காக பெரியார் சிலை புதுப்பிக்கப்பட்டு, அங்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் முழு வீச்சில் இன்று நடந்தது.
இந்நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மராமத்து செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. பொதுப்பணித்துறை சார்பில், 75க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 20 பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன், கலெக்டர் அலுவலக நுழைவாயில், சுற்றுச்சுவர், பிரதான கட்டடம் ஆகியவற்றின் உட்புறப்பகுதிகளில் புதிதாக வர்ணம் பூசும் பணியும், கிரானைட் படிகட்டுகள், உடைந்த டைல்ஸ்கள் ஆகியவற்றை மாற்றும் பணியும் நடந்து வருகிறது. மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வெளிப்புறமும் புதிதாக சிமென்ட், தார் சாலைகள் அமைத்தல், பழைய கலெக்டர் அலுவலக சாலைகள் சீரமைப்பு, புதிய பெயர் பலகை உள்ளிட்ட பணிகளும் முழு வீச்சில் நடந்தது. செடி, கொடி, புதர்களை அகற்றும் பணிகளும், இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியும், கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளும், வெளிப்புறமும் நேற்று நடந்தது. தொடர்ந்து இன்றும் பணிகள் நடந்தது.
கடைசியாக முதல்வர் ஸ்டாலின், 2010ல் நடந்த திருச்சி புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் துணை முதல்வராக கலந்து கொண்டார். அதன்பிறகு, 15 ஆண்டுகள் கழித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதால், அதனை புதுப்பொலிவூட்டும் வகையில் அமைச்சர் கே.என்.நேருவின் உத்தரவின்பேரில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய கலெக்டர் அலுவலகம் வரும் முதல்வர் ஸ்டாலின், அதன் வளாகத்தின் பின்புறம் உய்யக்கொண்டான் கரையை ஒட்டியுள்ள பழைய கலெக்டர் அலுவலகமாகவும், தற்போது அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வரும், ராணிமங்கம்மாள் கட்டடத்தையும் பார்வையிட உள்ளார். ரூ.9.40 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள பெருமைமிக்க இக்கட்டத்தையும், அதன் பழமையும் முதல்வர் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.