சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சூரியன் எப்போதும் மறையாது என்றும், திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான் என்றும் அவர் விமர்சித்தார். திராவிட இயக்கங்கள் இருக்காது என மத்திய உள்துறை அமைச்சர் பேசுவது வரம்பு மீறிய செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தாக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வைகோ, த.வெ.க-வின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெரியவரும் என்றும், அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

