சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்…
வீடு தேடி வந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்…
விநாயகர் சதுர்த்தி என்றாலே அரையடியில் இருந்து 20 அடி வரை கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு விற்கப்படும் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பல இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விநாயகர்
சதுர்த்தியான இன்று அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தில் சற்றே வித்தியாசமான விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்த நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழு பேர் ஒன்றிணைந்து, தங்கள் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து களிமண்ணை எடுத்து வந்து, தங்களது சின்னஞ்சிறு கைகளால் நேர்த்தியாக விநாயகர் சிலையை வடிவமைத்தனர். பின்னர் அந்த விநாயகருக்கு வண்ணம் தீட்டினர். பீடத்துடன் கூடிய விநாயகர் தயாரானவுடன் வீதி உலா செல்ல பலகையைக் கொண்டு வாரை தயார் செய்து அதனை ஆங்காங்கே நிறுத்தி செல்வதற்கு நான்கு வாரை தாங்கியையும் சிறுவர்களே உருவாக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உருவாக்கப்பட்ட இந்த விநாயகரை இன்று சிறுவர்கள் வீதி உலா அழைத்து சென்றனர். நான்கு சிறுவர்கள் விநாயகரை சுமந்தும், இரண்டு சிறுவர்கள் வாரை தாங்கிகளை எடுத்துக் கொண்டும், ஒருவர் பூஜை மணியடித்தும், ஒருவர் பூஜை செய்த வாரும் வீதிகளில் சென்றனர். விநாயகர் சதுர்த்தியான இன்று தங்களது வீடு தேடி வந்த விநாயகருக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
சிறுவர்களால் உருவாக்கப்பட்டு, தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களைக் கொண்டு அழகாக வர்ணம் தீட்டி, அந்த சிலைக்கு சிறிய அளவில் வாரை ஒன்றை அமைத்து, அதை ஊர்வலமாக எடுத்து வந்த சிறுவர்களின் பக்தி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியதோடு, மெய்சிலிர்க்கவும் வைத்தது. நாகல்குழி கிராமத்தின் ஒவ்வொரு தெருவில் உள்ள வீடுகளுக்கும் ஊர்வலமாக வந்த விநாயகரைக் கண்ட கிராம மக்கள், பக்தி பரவசத்துடன் சூடம் ஏற்றி, தங்களது வழிபாட்டினை செலுத்தினர்.
சிறுவர்களின் இந்த முன்னெடுப்பு நாகல்குழி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் சிறுவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் வீதி உலா கிராமத்தில் ஒரு புதிய மற்றும் எழுச்சிமிக்க கொண்டாட்டத்திற்கு வித்திட்டுள்ளது.