புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து இன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணியை நடத்தின. ஆலங்குடி- அறந்தாங்கி சாலை மேட்டுப்பட்டியில் துவங்கிய பேரணியை ரோட்டரி மாவட்ட செயலாளர் பொறியாளர் கனகராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பேரணி ஆலங்குடி அறந்தாங்கி சாலை வழியே சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் உள்ளூரில் துவங்கி உலக அளவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பல விதமான வன்முறைகள் பற்றி எடுத்துரைத்தார். குறிப்பாக குழந்தை திருமணம், குழந்தைகள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், அடக்குமுறைகள், பொருளாதார சமத்துவமின்மை போன்ற விஷயங்களை எதிர்த்து போராட வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கனகராஜன் தனது வாழ்த்துரையில் முத்துலட்சுமி ரெட்டியின் சாதனையை நினைவு கூர்ந்து இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக ரோட்டரி சங்க செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். திட்ட தலைவர் பள்ளி ஆலோசகர் ராஜராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆசிரியர் பெருமக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

