Skip to content

மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன். இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடர்பாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. கிருஷ்ணப்பிரியா பள்ளிக்குச் சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

இதற்கிடையே, அன்பரசன், மீது பாலியல் புகாரும் எழுந்தது. அதன் பேரில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் பேபி தலைமையிலான குழுவினரும், பள்ளி கட்டமைப்பு குழுவினரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், பாலியல் புகாரில் உண்மைத் தன்மை இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சமூக நலத்துறைக்கு சென்ற புகார் மீதான விசாரணை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழலில், பிரச்னைக்குரிய ஆசிரியர்கள் மூவரும் ஒரே இடத்தில் பணியாற்றினால் மேலும் பிரச்னை தொடரும் எனக் கருத்தில் கொண்டு, மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தலைமை ஆசிரியர் அன்பரசனை வி.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை அர்ச்சனா இனாம் மாத்துôர் அரசு மேல்நிலை பள்ளிக்கும், ஆசிரியை சுதா என். பூலாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், தலைமை ஆசிரியர் அன்பரசன் மட்டும் மாறுதல் உத்தரவை ஏற்று அந்த பள்ளியில் பணியில் சேர்ந்தார். ஆனால், ஆசிரியைகள் சுதா, அர்ச்சனா ஆகிய இருவரும் தங்களுக்கான மாறுதல் உத்தரவை வாங்க மறுத்து, மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். இதற்கிடையே தலைமை ஆசிரியர் அன்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் தெரிந்த கிராம மக்கள், புதன்கிழமை பள்ளியில் முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர். அவர்களுடன் கல்வி அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இந்நிலையில், அன்பரசனுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!