Skip to content

பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரீத்தி (6) என்று சிறுமி பவாத்ரா கிராமத்தில் உள்ள மருதர் சிக்ஷன் சன்ஸ்தான் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது மற்ற மாணவிகளுடன் சேர்ந்து பிரீத்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையின் தற்காலிகமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பிரீத்தி படுகாயமடைந்தார்.

உடனடியாக பள்ளி ஊழியர்களும், உள்ளூர் மக்களும் மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் பிரீத்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த பள்ளியில் உள்ள வகுப்பறைகள் அனைத்தும் ஐந்து முதல் ஏழு அடி உயரம் வரை சிமென்ட் செங்கற்களை அடுக்கி கட்டப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் என்றும், மேலே மூங்கில் கம்பங்கள் வைக்கப்பட்டு, கூரையாக தார்பாய்கள் பயன்படுத்தி மூடப்பட்டிருக்கும் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!