சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உணர்வு, ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்த உணர்ச்சி காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் பெறும் கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.
படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் மற்றும் காட்சிகள் (குறிப்பாக இந்தி திணிப்பு தொடர்பானவை) சென்சார் தரப்பால் நீக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. இதனால் படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு சென்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் UA சான்றிதழுடன் திரையரங்குகளில் வெளியானது.தற்போது ‘பராசக்தி’ ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி ZEE5 தமிழ் ஓடிடி தளத்தில் படம் ஸ்ட்ரீமிங் தொடங்குகிறது.
திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு சரியாக 28 நாட்களில் ஓடிடி ரிலீஸ் நடைபெறுவது தற்போதைய திரைப்படத் துறையின் பொதுவான போக்கு. இதனால் படத்தின் டிஜிட்டல் உரிமையை ZEE5 நிறுவனம் பெற்றுள்ளது. படம் திரையரங்கில் பார்க்க முடியாதவர்கள் அல்லது மீண்டும் ரசிக்க விரும்புபவர்கள் இப்போது வீட்டிலிருந்தே பார்க்கலாம்.ஓடிடி ரிலீஸ் தொடர்பான புரோமோஷனில் சிவகார்த்திகேயன் பேசும் வீடியோவை ZEE5 நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் சென்சார் தரப்பால் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் ஓடிடி தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பலரும் “தியேட்டரில் சென்சார் செய்த காட்சிகள் ஓடிடியில் இருக்குமா?” என்று எதிர்பார்த்து கேட்டு வருகின்றனர். இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை.ஒட்டுமொத்தமாக, ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

