கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தினை ஒப்பந்த கம்பெனி தாமதமாக தருவதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சம்பளத்தினை உரிய தேதியில் தரக்கோரியும், ரூ.50 கூடுதலாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி கமிஷ்னர் ஒப்பந்த கம்பெனி மற்றும் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பளத்தினை ரூ.50 உயர்த்தி உரிய தேதியில் வழங்கப்படும் என்று உறுதியளித்தை அடுத்து போரட்டத்தினை கைவிட்டனர். ஆனால் உறுதியளித்தப்படி ஒப்பந்த கம்பெனி சம்பளத்தினை உரிய தேதியில் வழங்காமல் தாமதமாக வழங்குவதாகவும், ரூ.50 சம்பளம் உயர்த்தி வழங்காமல் இருப்பதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.