Skip to content

ஹார்முஸ் நீரிணை மூடல் – உலக எண்ணெய் சந்தைக்கு பெரிய அதிர்ச்சி!

மத்திய கிழக்கில் தற்போது முழு அளவிலான போர் நிலைமை உருவாகியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட மூத்த தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் நோக்கம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முற்றிலும் அழிப்பது, ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஆதரவு நிறுத்துவது என்று அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பு அறிவித்தது.

இதற்கு பதிலடியாக ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சரமாரித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது, இதனால் உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஈரான், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “ஒரு சொட்டு எண்ணெய் கூட இந்நீரிணை வழியாக வெளியேற அனுமதிக்க மாட்டோம்” என்று ஈரான் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை ஏன் மிக முக்கியமானது?

உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (சுமார் 20%) ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. கத்தாரின் பெரும்பாலான எரிவாயு ஏற்றுமதியும் இதே பாதையில்தான் செல்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இந்நீரிணை வழியாகவே உலக சந்தைக்கு செல்கிறது.

ஈரானின் எச்சரிக்கை – என்ன அர்த்தம்?

ஈரான், “நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்த கப்பலும் தாக்கப்படும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அச்சுறுத்தியுள்ளது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலக எண்ணெய் விலை விண்ணைத் தொடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த மூடல் நிலைமையை மேலும் மோசமாக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

இந்தியாவுக்கு ஏற்படும் தாக்கம்

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் தடைபட்டால், நாட்டில் எரிபொருள் விலை பெரும் உயர்வை சந்திக்கும். பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்படும். ஒன்றிய அரசு இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!