10,11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!
பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதனை பாராட்டும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது!ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்!தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறுவோம்!” என்றார்.