Skip to content

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது:

அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என  பெயர் வைத்தோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என் தொகுதிகள் தான் என்ற எண்ணத்தில் அந்த பயணத்தை  தொடங்கினேன்.  அந்த விழா மேடையில் ஒரு பெட்டி வைத்து கோரிக்கை மனுக்களைபெற்றோம். 100 நாளில்   சாத்தியமான எல்லா காரியங்களையும் நிறைவேற்றுவேன் என்று சொன்னேன்.  அந்த பெட்டியை பூட்டி அறிவாலயத்தில் வைத்தோம்.

உடனே எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள்.? நீங்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. பெட்டியை திறக்கப்போவதில்லை என கிண்டல் செய்தார்கள். நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து  எங்களை ஆட்சியில்  அமர்த்தி்னீர்கள்.   உடனே புதுசா ஒரு துறைைய ஏற்படுத்தினோம். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற துறையை உருவாக்கி கோரிக்கை மனுக்கள் பெற்றோம். 2 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். சாத்தியம் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி உள்ளோம்.

அத்துடன் எங்கள் கடமை முடியவில்லை. இனி தான் தொடங்குகிறது என நினைத்து பணி செய்கிறோம்.  முதல்வரின் தனிப்பிரிவு, உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட  அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என தொடங்கி, முதல்வரின் முகவரி என புதுசா ஒரு துறையை தொடங்கினோம். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம்.

மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் ஆகியோர் பெறும் எல்லா மனுக்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தோம். கோரிக்கைகளை அனைத்தும் தலைமை செயலகத்துக்கு வந்தது. இப்போது வரை 68 லட்சத்து 39 ஆயிரம் மனுக்கள் பெற்றோம். அதில் 66 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.

தர்மபுரி மாவட்டத்தில் 72 ஆயிரம் மனுக்களுக்கு சாதகமான தீர்வு கண்டோம்.  உங்கள் ஊரில் உங்களை தேடி மனுக்கள் வாங்கி அதற்கு 30 நாளில் தீர்வு காண உத்தரவிட்டேன். 8 லட்சம் மனுக்களுக்கு இதுவரை தீர்வு கண்டோம். 30 நாளில் 1,800 மனுக்களுக்கு சாதகமான  தீர்வு காணப்பட்டது.

இப்போது அதனை ஊரக உள்ளாட்சிகளுக்கும் கொண்டு வந்தோம்.  அதை தொடங்கி வைக்க தர்மபுரி வந்து உள்ளேன். எங்களுக்கு தேர்தலில்  வெற்றி தந்தீர்கள்.  அதற்காக சில திட்டங்களை உங்களுக்கு அறிவிக்கிறேன். ரூ.51 கோடியில்  அரூர்  அரசு மருத்துவமனை வரிவாக்கம் செய்யப்படும். ரூ.  39கோடியில்  ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்.  விழா நடக்கும்  இந்த பாளையம்புதூர் பள்ளியில் 4 வகுப்பறைகள் பழமை  மாறாமல்  புதுப்பிக்கப்படும். இன்னும் கொஞ்ச நேரத்தில் 15 அறிவிப்புகள் வெளியாகும்.

மக்களிடம் செல், மக்களுக்காக செயல்படு என அண்ணா, கலைஞர் சொன்னார்கள். அந்த அடிப்படையில் தான் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

நாங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதால் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது அவதூறுகளை பரப்புகிறார்கள்.   தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையிலும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமி்ழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. 10 வருடத்தி்ல் எந்த  சிறப்பு திட்டமும் தமிழகத்திற்கு தரவில்லை. ஒன்றிய அரசு விருப்பு, வெறுப்புகளை கடந்து  பொதுவான அரசகாக செயல்படவேண்டும் என்பதை அவர்கள் உணரவில்லை.  தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.  எல்லா மக்களுக்குமான அரசாக நாம் செயல்படுகிறோம்.

மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். முதல்மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை உன்னதமான தமிழ்நாடாக உயர்த்துவோம் என உறுதி  கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் கே. என்.நேரு,  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மணி எம்.பி,  மற்றும் எம்.எல்.ஏக்கள் சேலம் ராஜேந்திரன்,  ஜி.கே. மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!