நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது. இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து முதல்வர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார், தீயணைப்பு படையினர், என்சிசி மாணவ, மாணவிகள், பங்கேற்றனர்.
தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
நாட்டு மக்களுக்கு மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பட்டொளி வீசி பறக்கும் தேசிக் கொடியை நான் மட்டுமல்ல அனைத்து மாநில முதல்வர்களும் ஏற்றும் ஜனநாயக உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். 5வது முறை தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
நாட்டின் விடுதலைக்கு காரணமான சுதந்திர போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். நாடு முழுவதும் அனைத்து மாநில மக்களும் போராடி பெற்றதே விடுதலை. அனைத்து பண்பாடு, மொழி, இன, மத மக்களும் ஒன்றாக போராடி பெற்றதே விடுதலை. அனைவருக்குமான இந்தியாவாக நாடு எப்போதும் இருக்க வேண்டும் என்று தலைவர்கள் கனவு கண்டார்கள். தலைவர்களின் கனவை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. தியாகிகளை பெயரளவில் நினைவுகூர்ந்து மறப்பவர்கள் அல்ல நாம். தமிழ்நாட்டில் தியாகிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவையே. வ.உ.சி. பிறந்தநாளில் 13 அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தினோம்.
பாரதியார் நினைவுநாளில் 14 அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்தியுள்ளோம். காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. கடலூரில் அஞ்சலையம்மாள் சிலை வைக்கப்பட்டது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், காமராஜர் மண்டபத்தை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்த்தப்படும்.
முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும் .முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும். ரூ.22 கோடியில் அமைக்கப்படும். * மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம் செய்யப்படும்.
அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மாநில அரசுகளுக்கு படிப்படியாக கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படுகிறது. மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறன. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை எப்போதும் போராடில, வாதாடி பெற வேண்டியுள்ளது,மத்திய-மாநில அரசுகளுக்கு இடையான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு , அதை நிறைவேற்றி முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என இவ்விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தகைசால் தமிழர் விருதினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுபோல அப்துல்கலாம் விருது, இஸ்ரோ தலைவர் முனைவர். நாராயணனுக்கு வழங்கினார் .
வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.