Skip to content

70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அதன்பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் முதல்-அமைச்சர், அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு காலை 8 முப்பது மணியளவில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். இதையடுத்து, மாலை 5 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், உள்ளிட்டோர், 07127 1913 33 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை 30 விநாடி பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், selfiewithCM.com என்ற இணையதளத்துடன் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் பல்வேறு புகைப்படங்களோடு, மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் அதில் செல்ஃபி எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!