கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் சந்தைப்படுத்துவதற்காக “Co-Op Bazaar” என்ற புதிய செயலியை சென்னையில் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். இந்த செயலி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு 64 வகை பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பிறகு அமைச்சர் பெரியகருப்பன், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தக்காளி விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ளது. தக்காளியை குறைந்த விலைக்கு விற்கும் அரசின் நடவடிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பிற மாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தக்காளி விலையை மேலும் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கிவைப்பதாக இதுவரை தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்.