சென்னை முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” எனவும் திட்டவட்டமாக பதிவிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தியும் முதல்வர் பேசியது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது குறித்து பேசும்போது ” இந்தியாவின் மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும், கூட்டணி ஆட்சி என்பதற்கு மக்கள் ஆதரவாக தான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரையில், கூட்டணி ஆட்சி அமைவதில் பிரச்சினை இருப்பதாக கருதவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ஏன் ஏற்காது? எனவும் பிரவீண் சக்கரவர்த்தி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

