கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதேபோல் தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சி.ஆர்.பி.எப்.ல் 97வது சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 பெண்கள் உட்பட 366 வீரர்களுக்கு 48 வார காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு உடற்பயிற்சிகள், நவீன உபகரணங்களை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சிகளை முடித்த வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை சி.ஆர்.பி.எப்.பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஐ.ஜி. லாங்சின்குப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களின்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு பயிற்சியின் போது ஆல்ரவுண்ட் பெஸ்ட் டிராபி, பெஸ்ட் இன்டோர், பெஸ்ட் அவுட்டோர், பெஸ்ட் டிரில், பெஸ்ட் பயர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரகளுக்கு கோப்பைகளை வழங்கி பேசும்போது, நம் நாட்டின் தற்போதிய பாதுகாப்பு சூழ்நிலையில் சி.ஆர்.பி.எப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சிறந்த செயல்திறன்களை கொண்டு உங்கள் சேவையில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களில் வெற்றிபெறவேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து வீரர்களின் கண்கவர் யோக மற்றும் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மரம் நடும் விழாவும் நடைபெற்றது. இறுதியில் 366 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் பேட்சுகளை அனுவித்து செல்பி, குரூப் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர். இப்பயிற்சி முடித்த வீரர்கள் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். இந்த விழாவில் தலைமை பயிற்சி அதிகாரி மற்றும் கமாண்டன்ட் ஸ்ரீ அந்தோணி ஜென்சன், அணிவகுப்புக்கான இயக்குநர் டி.எஸ்.பி கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.