கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 43 ஆண்களும், 10 பெண்களுமாக மொத்தம் 53 பேர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம் மற்றும் எடை அளவீடு ஆகியன மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. இந்த ஆள்சேர்ப்பு முகாம், ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் மேற்பார்வையில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை பிரதேச தளபதி விக்னேஷ்வர் முகாம் ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார். கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேருவதற்கு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மாநகர காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
