கோவை, ஒப்பணக்கார வீதி அடுத்த ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை கடையில் லிப்டில் இருந்து தவறி விழுந்து கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், தனது குடும்பத்தோடு கோவை கெம்பட்டி காலணியில் குடியிருந்து வருகிறார். இவர் ஆஷிக் ஸ்டோரில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் ஊழியர் சுரேஷ், இன்று காலை பொருட்களை மேல் தளத்திற்கு கொண்டு செல்ல லிப்டில் ஏறிய போது, திடீரென சம நிலையை இழந்து லிப்டில் இருந்து கீழே தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கடைவீதி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.