தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. தொழில் நகரமாக கோவையில், பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் தங்கி தொழில் கூடங்களில் தொழிலாளர்களாகவும், தொழில்களும் செய்து வருகின்றனர்.
தொழில் துறைகள் ஒருபுறம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு மோசடிகளும் நாளுக்கு, நாள் அரங்கேற வருகிறது.
இந்நிலையில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் பதிவு செய்து, குழந்தைகளுக்கு உணவு, உடைகள் அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்டம் முழுவதும், தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று நன்கொடைகள் என்ற பெயரில் வசூலிலும் ஈடுபடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் உள்ளது.தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற சுமார் 26 குழந்தைகளை பராமரிப்பதாக கூறப்படுகிறது.
அங்கு குழந்தை ஒன்றை அங்கு உள்ள நபர் ஒருவர் பெல்டால் கொடூரமாக தாக்கும் செல்ஃபோன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாய், தந்தையரை இழந்து ஆதரவற்ற தவிக்கும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பயனு உள்ளதாக அமையும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.